சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மிதுன ராசி
(மிருகசீரிடம் 3,4ம் பாதம்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

திருக்கணிதப்படி வரும் மார்ச் 29-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். பத்தில் சனி… உத்தியோகம், தொழிலைப் பாதிக்குமோ?’ என்று கவலைப் பட வேண்டாம். இந்த வருடம் குருப் பெயர்ச்சியும் நிகழ்கிறது. குருபகவானின் சஞ்சாரம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கப் போகிறது.
உத்தியோகம், வியாபாரம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் தெளிவோடு முடிவெடுக்க வேண்டிய காலம் இது. இழந்ததை மீண்டும் பெறக்கூடிய காலமாக இது இருக்கும். இழந்த பணம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும்.
சொந்த ஊரில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்க்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். தந்தை வழியில், எதிர்பாராத வகையில் சில அனுகூலங்கள் உண்டாகும்.
உங்களில் சிலர் சேமிக்கத் தொடங்கும் அளவுக்குச் சூழல் சாதகமாகும். திருக்கோயில் திருப்பணிகளில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான நிலை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
சனி பகவானின் பார்வை பலன்கள்
சனி உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு, அவர்களுடைய தாயாரின் உடல் நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். எதன்பொருட்டும் எவருக்காகவும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
சனி உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கர்ப்பப் பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும்.
சனி பகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.
மொத்தத்தில் வேலைப்பளுவும், சவால்களும்உண்டு என்றாலும் கூட, உங்களுக்குள் தன்னம்பிக்கை வளரும் காலமாக அமைகிறது.
மிருகசீரிடம் நட்சத்திரம்
வியாபாரம் தொழிலை விருத்தி செய்யலாம். அதேநேரம், ஏதேதோ வாய்ப்புகள் வருகிறது என்பதற்காக, புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். மே மாதம் வரையிலும் சிற்சில குழப்பங்கள் உண்டு என்பதால், அப்போது வரை எந்தவொரு புது முடிவுகளும் வேண்டாம்.பண வரவு உச்சத்தை தொடும் என்றாலும், எதிர்பாராத செலவுகளால் மிச்சத்தை தராது. மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
திருவாதிரை நட்சத்திரம்
செப்டம்பருக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கும். புதிய திட்டங்களை அப்போது செயல்படுத்தலாம்.இந்த காலகட்டத்தில் வெள்ளம் போல வரும் செல்வத்தை அணைகட்டி சேமித்தால் சுகம் பெறலாம்.
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்குப் பயணங்கள் அதிகமாகும்.இந்த சனிப்பெயர்ச்சி, சில நன்மைகளை தந்தாலும், குடும்பத்தில் சில சலசலப்புகளை ஏற்படுத்தி சிறு களங்கத்தையும் உண்டாக்கும்.
மற்றபடி, மிதுன ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மதிப்பெண் கூடும். இளையோருக்கு, அவர்கள் விரும்பிய வகையில் திருமணம் நடக்கும். வியாபாரம் தொழில் பெருகும். உத்தியோகம் கிடைக்கும். இவை ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு நடக்கும்.
வருமானம் பெருகும். தொழில் மேன்மைக்காக சுபச் செலவுகளுக்காக, அளவுடன் கடன் வாங்கலாம். எனினும் எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
பெண்களுக்குச் சந்தோஷமான சூழல்கள் அமையும். புது உறவுகள் வந்துசேரும்.சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். அச்சமே தேவையில்லை. கலைஞர்களுக்கு விருதும், பரிசும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வீண் விமர்சனங்கள் குறித்து கவலை வேண்டாம். அறிவியல் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புதிய கண்டு பிடிப்புகள் கைகூடும்; அதனால் விருதுகளும் கிடைக்கும். பொதுவாக நன்மை கூடும் காலம் இது.
பரிகாரங்கள்:
ஒவ்வொரு சனிக்கிழமையும், சக்கரத்தாழ்வாரை 12 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டுப் பலன் பெறலாம். சுதர்சன அஷ்டகம் படிக்கலாம். இதனால் சகல தோஷங்களும் நீங்கும். மதுரை – திருமோகூர் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டு வந்தால், நன்மைகள் நடக்கும்.
மேலும் படிக்க கிளிக்