சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம்,உத்திரட்டாதி,ரேவதி)
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பகவான் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் உங்கள் ராசியில் வந்து ஜன்மச் சனியாக அமரப்போகிறார். அதேபோல் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளது. ராகு 12-ம் இடத்துக்கு வரப்போகிறார். ஆகவே, ஒருவித் பதற்றம் உங்களை ஆட்கொள்ளலாம். கவலை வேண்டாம். தெய்வத் துணை உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.
ஜன்மச் சனி என்பதால் உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனைவி வழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர்ப் பயணங்களால் வீண் அலைச்சல். டென்ஷன் ஏற்படும். இளைய சகோதரரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
வங்கிக் கடனுதவியால் வீடு கட்டும் பணியைப் பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

சனி பகவானின் பார்வைப் பலன்கள்:
சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவ பதவி வரும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
சனி பகவான் உங்களின் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும்.
சனி பகவான் உங்களின் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
மற்றபடி, உடற்பிணிகள் சார்ந்து அதீத கவனத்துடன் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். முட்டிக்குக் கீழே காலில் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. பல் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனம் தேவை. ஜன்மச் சனி என்றாலும் திருமணம் போன்ற சுபகாரியங்களில் தடைகள் இருக்காது. வீடு, வாகனம், நகைகள் வாங்குவதில் குறை இருக்காது. முதலீடு செய்யலாம். பிள்ளைகளிடம் வாக்குவாதம் வேண்டாம். உறவுகளிடம் நிதானம் வேண்டும். பிள்ளைப்பேற்றுக்காக ஏங்குபவர்களுக்கு நல்லது நடக்கும்.
பெண்களுக்கு மனஅழுத்தம் உருவாகும். நிறைய புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள் நிலைமை மாறும். ஆன்மிகப் பெரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பழநி, திருப்பதி, பத்ரி, கேதார்நாத் போன்ற மலைத்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.
வியாபாரிகளே, தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் செய்து மாட்டிக்கொள்ளாமல், சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். எதிர்ப்பையும் தாண்டி லாபம் உயரும். எனினும் வியாபார கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள்.
உத்தியோகஸ்தர்களே, உங்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். இதுவரையிலும் தொந்தரவு தந்து வந்த பழைய அதிகாரிகள் மாற்றலாகிச் செல்வார். புது அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள்.
உத்திரட்டாதி:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் பிரச்னைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன்,மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும்.
ரேவதி:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் சுறு சுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
பரிகாரங்கள்:
- ஏதேனும் ஒரு சனிக்கிழமை அன்று கரூர் ஐயர் மலைக்குச் சென்று, அங்குள்ள ஈசனைத் தரிசித்து வாருங்கள்.
- அதேபோல், திருச்சி – திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபடுங்கள்.
- மீன ராசி மாணவர்கள், புதன்கிழமைகளில் பெருமாளுக்கும் கருடனுக்கும் விளக்கேற்றி வழிபடலாம்.
- வியாழக் கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்கி வழிபடலாம்.
- சனிக்கிழமை அன்று, சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.
மேலும் படிக்க கிளிக்