சனி பெயர்ச்சி பலன்கள் 2025: கன்னி ராசி
(உத்திரம் 2,3,4ம் பாதம்,ஹஸ்தம்,சித்திரை1,2ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து வந்த சனிபகவான், வரும் மார்ச்-29 முதல், ஏழாம் இடத்துக்குச் செல்கிறார். இதனால் கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்தக் காலத்தில் வழக்குகள் சாதகமாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும்.
6-ல் இருந்த சனியால் ஆரோக்கியக் குறைவு, விபத்து போன்றவை நடந்திருக்கலாம். இப்போது சனி தனவிருத்தியைக் கொடுப்பார்.எனினும், இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விலையுயர்ந்த பொருள்கள், நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றில் அதீத கவனம் தேவை. அதேபோல் அரசாங்க வரிகள் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்தக் காரியமும் செய்யவேண்டாம்.
இந்த வருடத்திலேயே ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளது. ஆகவே பயணங்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சகோதர சகோதரிகளால் ஏற்படும் கடன் பிரச்னைகள். உங்களுக்குத் தலைவலியைத் தரலாம், கண்டகச் சனி உறவுச் சிக்கல்களை உருவாக்கும். கவனம் தேவை. பொருளாதாரத்தில் எச்சரிக்கை வேண்டும்.
பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வர். உத்தியோகம்,வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரியவேண்டி வரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது, பிரபலங்கள், வேற்றுமொழிக் காரர்கள் உதவுவார்கள்.
சனி பகவானின் பார்வை பலன்கள்
சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், அலர்ஜி பிரச்னைகள் வரக்கூடும். தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. நேரம் தவறி சாப்பிட வேண்டாம்.
சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.
சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்பு கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் அதீத அக்கறை தேவைப்படும். எதிலும் அலட்சியம் கூடாது. முக்கியமான விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கடன் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் அகலக்கால் வைக்கவேண்டாம். பண விஷயத்தில் பலமுறை யோசித்து செயல்படவும்,
பணியிடத்தில் கோபமும் வேகமும் கூடாது. நிதானத்துடன் நடப்பது மிகவும் அவசியம். வீண் விமர்சனங்களைத் தவிர்த்து விடுங்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். திடீர் இடமாற்றம் உண்டு.
இல்லத்தரசிகளே! உங்கள் உடல்நலனிலும் கணவரின் ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் செலுத்துங்கள். அலுவலகம் செல்லும் பெண்கள், சக ஊழியர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்கள், பயப்படும் அளவுக்கு இந்த சனிப் பெயர்ச்சி அமையவில்லை என்றாலும் எதிலும் எச்சரிக்கை அவசியம். ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு தெளிவும் அமைதியும் பெருகும்.
உத்திரம் 2,3,4ம் பாதம்-நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
அஸ்தம்-நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள்.உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு – மனை வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.
சித்திரை 1, 2, பாதம் -நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரங்கள் :
அஷ்டமி திதிநாள், ஞாயிறு,செவ்வாய்க் கிழமைகள்… இந்த நாள்களில் ஏதேனும் ஒரு நாளில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.
அமாவாசை, பௌர்ணமியில் சரபேஸ்வரருக்குத் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனால் கடன் மற்றும் வியாபார் பிரச்னைகள் தீரும்.
அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட, சிறப்பான வாழ்வு அமையும்.
மேலும் படிக்க கிளிக்