பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan in Tamil
பல்லி விழும் பலன்கள்: உங்கள் உடலில் எந்தப் பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்!
நம் முன்னோர்கள் நமக்காக பல விஷயங்களை கற்றுக் கொடுத்து சென்றுள்ளனர். மிருகங்கள் அல்லது பறவைகள் எழுப்பும் சத்தம் அல்லது அவை செய்யும் செயல்கள் மூலம் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் எச்சரிக்கையினை அது அளிக்கிறது அல்லது ஏதேனும் சுபகாரியங்கள் நடக்க உள்ளது என்பதனை நாம் கண்டறிய உதவி செய்கிறது..நம் வீட்டில் நம்முடனே ஒரு ஓரத்தில் வசிக்கும் பல்லி திடீரென நம் மேல் விழுந்து விடும். அவ்வாறு திடீரென்று விழுந்தவுடன் நாம் சற்று பதட்டம் அடைவோம், அடுத்த நொடி நம் ஞாபகத்திற்கு வருவது. நம் மேல் பல்லி விழுந்து விட்டதே! இதன் அறிகுறி என்ன என்று, உடனே பல்லி விழுந்த பலனை தேடுவோம்.
இப்படி நம் உடலில் தலை, கை, கால் போன்ற ஏதேனும் உறுப்பின் மேல் பல்லி விழுந்தால், அது எதைக் குறிக்கிறது என்பதையும் இதன் மூலம் நமக்கு சுபம் ஏற்படுமா அல்லது ஏதேனும் பிரச்சனைகள் அல்லது சிக்கல்கள் வருமா என்பதனை மனம் சற்று குழப்பத்துடனும் பயத்துடனும் யோசித்துக் கொண்டிருக்கும். உங்கள் குழப்பத்தையும் சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்வதற்கு கீழே உள்ள பல்லி விழும் பலன்கள் கட்டுரையை முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.
நம் வீட்டில் பல்லிகள் இருப்பது பல விதமான செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. பாரம்பரியமாகவே, நம் வீட்டில் பல்லி இருப்பது மகிழ்ச்சியும் செல்வமும் மற்றும் சுப காரிய அறிகுறியாகவும் பல விதங்களில் நமக்கு பல செய்தியை தெரிவிக்கிறது. சில வெளிநாடுகளில் பல்லியை தீய சக்திகளை விரட்டும் ஒரு அற்புதமான உயிரினம் என்று கருதுகிறார்கள்.
நம் வீட்டில் சுவரில் இருக்கும் பல்லி, நிறத்தின் அடிப்படையில் கருப்பு வெள்ளை என சில நிறங்களில் இருக்கும். ஒவ்வொரு விதமான பல்லியை பார்ப்பதன் மூலம் வெவ்வேறு பலன்கள் உள்ளது. மேலும் பல்லி சுவரிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தால் என்ன பலன், உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லி தலையிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு என்ன பலன், நம்ம மேல் பல்லி விழுந்தால் அதற்கு என்ன பலன் என்பதனை விரிவாக காணலாம்.
தெய்வமாக வணங்கப்படும் பல்லி
கௌரி சாஸ்திரம், என்று பண்டைய காலங்களில் பல்லியை பற்றி படிப்பதற்கு என தனி படிப்பே இருந்தது. அதன் மூலம் கௌரி பஞ்சாங்கம் என்பதனை உருவாக்கினர். இன்றளவும் நம் உடலில் எங்கேயும் பல்லி விழுந்தால் உடனே கௌரி பஞ்சாங்கத்தில் பல்லி விழுந்த இடம் மற்றும் அதற்கு ஏற்ற பலனை தேடுவோம். நம் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு தெய்வ சக்தி இருப்பதாகவே இன்றளவும் நம்பப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் வரதராஜ சுவாமி கோயிலின் கற்ப கிரகத்தின் மேல்பகுதியில் பல்லியின் உருவம் தங்கம் மற்றும் வெள்ளியில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் பக்தியுடன் இன்றும் கோவிலுக்கு சென்று பல்லியை தரிசனம் செய்கிறார்கள். அதேபோல் திருச்சி அருகில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இன்றளவும் பல்லியை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan in Tamil
உங்கள் வீட்டில் கருப்பு நிற பல்லி உள்ளதா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
நம் வீட்டின் சுவரில் இரண்டு விதமான நிறத்தில் பல்லி காணப்படும். அவை வெள்ளை நிற பல்லி மற்றும் கருப்பு நிற பல்லி. இதில் கருப்பு நிற பல்லி உங்கள் வீட்டில் உள்ளதா என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு இருந்தால் அது எதன் அறிகுறி என்பதை இப்பொழுது காணலாம்.
கருப்பு நிறப் பல்லி நமது வீட்டின் சுவரிலோ அல்லது சாமி அறையின் அருகிலோ இருப்பது வீட்டிற்கு உகந்தது அல்ல. கருப்பு நிற பல்லி வீட்டில் இருப்பது, உங்கள் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் அல்லது வீட்டில் உள்ள நபர்களுள் யாருக்கேனும் பண இழப்பு, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான அறிகுறி. பொதுவாகவே பல்லி என்பது தெய்வமாக கருதப்படும் ஒருவகை உயிரினம். அதிலும் முக்கியமாக பல்லியை லட்சுமி கடாக்ஷமாக நினைப்பார்கள். ஆனால் கருப்பு நிறப் பல்லி அவ்வாறு லட்சுமி தேவியை குறிக்கவில்லை. சிலர் பல்லியை நவகிரக கேது பகவான் என்றும் கூறுகிறார்கள். கருப்பு நிற பல்லி உங்கள் வீட்டில் இருப்பது ஏதேனும் சுபகாரிய தடை அல்லது சரி இல்லாத சகுனத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறது. அதனால் வீட்டில் கருப்பு நிற பல்லி இருக்கக் கூடாது.
உங்கள் வீட்டில் உள்ள பல்லி அடிக்கடி தரையில் விழுகிறதா?
சிலரது வீட்டில் சுவரில் இருக்கும் பல்லி அடிக்கடி தரையில் விழுவதை நீங்கள் கண்டிருக்கலாம். எப்பொழுதாவது அப்படி தவறி விழுவது என்பதுவேறு. ஆனால் நீங்கள் அடிக்கடி இது போன்ற ஒரு நிகழ்வை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா?
வீட்டின் சுவரில் இருக்கும் பல்லி தொடர்ந்து கீழே தரையில் விழுவது வீட்டிற்கு நல்லது அல்ல. அதுபோல பல்லியை ஒரு போதும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது.
தினமும் வீட்டு வாசலில் பல்லி இருப்பதை பார்க்கிறீர்களா?
உங்கள் வீட்டின் நுழைவுவாயில் மேல் பல்லி செல்வதை அடிக்கடி பார்க்கிறீர்களா. அது உங்கள் வீட்டின் நல்ல சகுனத்தை குறிக்கிறது. வெகு விரைவில் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க உள்ளது மற்றும் ஐஸ்வர்யங்கள் பெருகும். என்பதனை இந்த அறிகுறி சுட்டிக்காட்டுகிறது.
பல்லி விழும் இடங்கள் (உறுப்புகள்) மற்றும் அதன் பலன்கள்
உறுப்பு | வலது பக்கம் | இடது பக்கம் |
தலை | கலகம் | துன்பம் |
நெற்றி | லட்சுமி கரம் | காரிய நிவர்த்தி |
கண் | சுகம் | சிறை பயம் |
மூக்கு | வியாதி | கவலை |
காது | ஆயுள் நீடிப்பு | லாபம் |
உதடு | கஷ்டம் | வரவு |
கழுத்து | பகை | வெற்றி |
கை | துக்கம் | துன்பம் |
கைவிரல் | சன்மானம் | சஞ்சலம் |
கைநகம் | செலவு | நஷ்டம் |
மார்பு | தன லாபம் | சுகம் |
வயிறு | தானியம் | மகிழ்ச்சி |
விலா | வாழ்வு | தாழ்வு |
முதுகு | நஷ்டம் | கவலை |
மணிக்கட்டு | பீடை | கீர்த்தி |
தோள்பட்டை | வெற்றி | போகம் |
பிருஷ்டம் | சுகம் | செல்வம் |
தொடை | துக்கம் | சஞ்சலம் |
கணைக்கால் | பிரயாணம் | சுகம் |
முழங்கால் | நஷ்டம் | பந்தயம் |
பாதம் | நோய் | துக்கம் |
பாதவிரல் | ராஜ பயம் | நோய் |
கபாலம் | கதனம் | வரவு |
தலையில் பல்லி விழுந்தால்
தலையில் பல்லி விழுந்தால், அது உங்களுக்கு ஒரு அபசகுனமான எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தலையின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ பல்லி விழுந்தால் குடும்பத்தில் கலகம், மன நிம்மதி இழப்பு, சண்டை போன்ற பிரச்சனைகள் அன்றைய தினம் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கும் மற்றும் உங்களின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்களோ இறப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். அதனால் தலையில் பல்லி விழுந்த அந்த நாள் முழுவதும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நெற்றியில் பல்லி விழுந்தால்
நெற்றிப் பகுதியில் பல்லி விழுந்தால் சுகமான செய்திகள் வந்து சேரும். லட்சுமி கடாக்ஷம் பொங்கி வரும். நெற்றியின் வலது புறத்தில் அல்லது இடது புறத்திலோ பல்லி விழுந்தால் அது ஒரு நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.
மூக்கு மற்றும் இரண்டு புருவங்களுக்கும் நடுவில் பல்லி விழுந்தால்
மூக்கு மற்றும் இரு புருவங்களுக்கு நடுவில் பல்லி விழுந்தால் அந்த நாள் முழுவதும் ஏதாவது அபச குணங்கள், வியாதி, ஏதேனும் பிரச்னையை நினைத்து கவலை, சங்கடம் ஏற்படும். அல்லது பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரக்கூடும்.
கபாலம், புருவம், கண் பகுதிகளில் பல்லி விழுந்தால்
இடது கபாலம் அல்லது வலது கபாலம் மற்றும் இடது புருவம் அல்லது வலது புருவம் இடது கண் அல்லது வலது கண் போன்ற பகுதிகளில் பல்லி விழுந்தால் அது நல்ல சகுனத்தை குறிக்கிறது. ராஜ அனுக்கிரகம், ராஜ பதவி உள்ளவர்களிடமிருந்து ஏதேனும் உதவி, அந்த நாள் முழுவதும் அன்பால் கட்டிப் போடுதல், சுகம் போன்றவை நிகழும்.
கழுத்துப் பகுதிகளில் பல்லி விழுந்தால்
கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் ஏதேனும் பகை ஏற்படக்கூடும். அன்று நாள் முழுவதும் ஏதேனும் தேவையில்லாத சண்டை அல்லது பிரச்சனை உருவாகி அதனால் நீண்ட நாட்கள் பழகியவர்களுடன் பகை ஏற்படக்கூடும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் வெற்றி அடையும்.
வலது கை மற்றும் வலது காலில் பல்லி விழுந்தால்
நம் உடலில் வலது கை பகுதி அல்லது வலது கால் பகுதிகளில் பல்லி விழ நேரிட்டால் அன்று ஏதேனும் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏதேனும் துக்கமான நிகழ்வு அதன் மூலம் உங்களுக்கு ஒரு துக்கமான செய்தி வந்து சேரக்கூடும்.
இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால்
இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுவதன் மூலம் அன்றைய நாள் ஏதேனும் துன்பம் ஏற்படும். அபச குணமாக கருதப்படுவதால் அன்றைய நாள் முழுவதும் பீடை, கண்டம், துக்கம் போன்ற தீய செயல்கள் நடக்கக்கூடும்.
முதுகு மற்றும் தொடை பகுதியில் பல்லி விழுந்தால்
தொடை பகுதி அல்லது முதுகுப் பகுதிகளில் பல்லி விழுந்தால் அன்றைய நாளில் ஏதேனும் பெரிய அளவு நஷ்டம், சஞ்சலம், துக்கம் அல்லது ஏதேனும் கவலைகள் நிகழும்.
கைவிரல் மற்றும் மார்பில் பல்லி விழுந்தால்
வலது கை விரலில் பல்லி விழுந்தால் மற்றும் இடது மற்றும் வலது மார்பில் பல்லி விழுந்தால், அந்த நாள் சுகமாகவும், தன லாபத்துடனும் பல சன்மானங்களுடனும் உங்களுக்கு அமையும். ஆனால் இடது கைவிரலில் பல்லி விழுந்தால் ஏதேனும் சஞ்சலம் தோன்றும்.
பல்லி விழுந்தால் அதற்கு நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?
நமது சாஸ்திரங்களில் பல்லி விழுந்தால் அதற்கென தனி பரிகாரங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
எந்த இடத்தில் பல்லி விழுந்தாலும் அது நல்ல பலனை தரும் என நீங்கள் தெரிந்து கொண்டாலும் உடனடியாக நீங்கள் தலைக்கு நீரூற்றி நன்றாக தலை குளிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்த பிறகு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயில், விநாயகர் கோயில், அல்லது விஷ்ணு கோயில் போன்றவற்றில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிப்பட வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று அங்கே உள்ள சிவன் சன்னதியில் இருக்கும் சிவனையோ அல்லது அனைத்து கோயிலிலும் இருக்கும் விநாயகரையோ அல்லது விஷ்ணு சன்னதியில் இருக்கும் விஷ்ணுவையும் வணங்கி வர வேண்டும்.
உங்களால் கோயிலுக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அல்லது கோயிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபடுங்கள்.
உங்களுக்கு பிடித்த ஒரு இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை கூறி வழிபடுங்கள். பெரியளவு மந்திரம் தான் சொல்ல வேண்டும் என்று கிடையாது. உங்களுக்குத் தெரிந்த ஒரு வரி அல்லது இரண்டு வரி மந்திரங்கள் சொன்னால் போதுமானது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாளையோ அல்லது திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். வெகுதூரத் தொலைவில் இருப்பதால் செல்ல முடியவில்லை அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் செல்ல முடியவில்லை என்றால், உங்கள் மனதில் பல்லியை நினைத்து வழிபடுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பல்லி விழும் பரிகாரங்களை, பல்லி விழுந்த உடன் நீங்கள் செய்தால், பல்லி விழுந்ததன் தீமைகள் மற்றும் தோஷங்கள் உங்களை விட்டு முழுமையாக நீங்கும்.
இதையும் படிக்கலாமே,