ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : ரிஷபம்
நவக்கிரகங்களில், அதி சக்திவாய்ந்த ராகு, ரிஷப ராசிக்கு, லாப ஸ்தானமாகிய மீனத்தைவிட்டு, ஜீவன ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது, பல அம்சங்களில் நன்மைகளையும், சில விஷயங்களில் சிரமத்தையும் கலந்து அளிக்கக்கூடிய சஞ்சாரமாகும்.
சனி பகவானைப் போலவே, ராகுவும் கடினமான வேலையை வாங்கிய பின்பே, சற்று தாராளமாகக் கூலி கொடுக்கும் தன்மை வாய்ந்தவர். குடும்பத்தில் பண வசதி தாராளமாகவே இருக்கும். ஆயினும், இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
கேதுவின் நிலையினால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் அதிகமாக இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இராது. ரிஷப ராசிக்கு, சிம்மம் சுகஸ்தானமாகும். ஆதலால், அடுத்துவரும் சுமார் 18 மாதங்களுக்கு கேதுவின் நிலையினால், மனதில் சுகம் குறையும். குடும்பத்தைப் பற்றிய கற்பனையான கவலைகள் மனதை அரிக்கும். பண வரவு, போதிய அளவு இருப்பினும், எதிர்பாராத செலவுகளினால், பணம் விரயமாகும்.
சித்திரை 28-ம் தேதி (மே 11, 2025 ஞாயிறன்று குரு பகவான் மிதுன ராசிக்கு மாறியவுடன், கும்ப ராசியில் உள்ள ராகுவிற்கு, அவரது சுபப் பார்வை கிடைக்கிறது. அதன் விளைவாக, ராகுவின்தோஷம் குறைகிறது.
பரிகாரம் :
தினமும் காலையில் நீராடிய பின்பு காகத்திற்கு எள், நெய், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வரவும். அல்லது ஒரு பசுவிற்கு உணவளித்தாலும் அதே பரிகார பலனை கிடைக்கப் பெறலாம்.