ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மிதுனம்
மிதுன ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு ராகு மாறி, முன்னமேயே அங்குள்ள சனி பகவானுடன் சேர்கிறார். இந்தக் கிரகச் சேர்க்கை, நன்மை செய்யாது எனப் புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே தருணத்தில், மிதுன ராசியில் அமர்ந்துள்ள கேது, நன்மை செய்வார்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார்,ராகு ! “கைப் பணம் எவ்வாறு கரைந்தது, அதற்குள்ளாக…?!” என நீங்களே வியக்கும்வண்ணம் விரயத்தை ஏற்படுத்திவிடுவார், ராகு !! “இது போதாதென்று…” என்பது போல், சனி பகவானும் தன் பங்கிற்கு செலவுகளை உண்டாக்கிவிடுவார் !
சித்திரை 28-ம் தேதி முதல் (11-05-2025) ராகு – சனியை, குரு, தனது 9-ம் சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், செலவுகள் பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும்,
கேதுவின் நிலையினால், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும்,சுப விரயங்களையும் ஏற்படுத்தும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பெண் அல்லது பிள்ளை அல்லதுமாப்பிள்ளையின் வரவு, குதூகலத்தை உண்டுபண்ணும். திருமண முயற்சிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.தாயின் உடல் நலனில் கவனமாக இருத்தல் நல்லது.
பரிகாரம் :
சனி, ராகுவிற்கு பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இது உதவும். தினமும் காலை- மாலை இருவேளைகளிலும், ‘ஓம் நமசிவாய” எனும் பஞ்சாட்சர மந்திரத்தையும்,”ஓம் நமோ நாராயணாய” எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் 108 அல்லது 48 தடவைகள் சொல்லி வந்தால், பலன் கைமேல்!
அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைதோறும், பிரதோஷகாலமாகிய மாலை 4.30 முதல் 6.30-க்குள்ளாக முன்று மண் அகல் விளக்குகளில், பசு நெய் அல்லதுநல்லெண்ணெய் தீபம் ஏற்றிவந்தால், போதும். ஒவ் வொரு துளி எண்ணெய்க்கும் மகத்தான சக்தி பலனுண்டு.